பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு அமைச்சு, தனியார் போக்குவரத்து அமைச்சு மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சு ஆகியவற்றின் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், 573 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் சட்டவிரோதமாகச் சம்பாதித்தமை தொடர்பில் சி.பி. ரத்நாயக்க, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் டிசம்பர் 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை டிசம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.