அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச சேவை மற்றும் அரச சேவை அல்லாத பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (05) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் சந்தன சூரியஆரச்சி எம் பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் இணைக்கப்பட்டுளள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில். அதற்கு எதிராக ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்றதால் அந்த நடவடிக்கையை இடை நிறுத்தி இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆசிரியர் சேவை பிரமானக்குறிப்பு, அரச சேவை ஆணைக்குழு மற்றும் அரசாங்கம் இதுதொடர்பில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து, அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நீதிமன்றத்துக்கு எமது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தோம். அதன் பிரகாரம் தற்போது நீதிமன்ற வழக்கு கடந்த மாதம் 20ஆம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழக்குத் தீர்ப்பின்படி அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளையும் வயதெல்லையை நிர்ணயம் செய்து, ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லையை நிர்ணயம் செய்து தனித்தனியாக பரீட்சைகளை நடத்தி நிலவும் வெற்றிடங்களுக்காக ஆசிரியர் சேவையில் மூன்றாம் தரத்தில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் பிரகாரம் எதிர்காலத்தில் வயதெல்லையை திருத்தம் செய்து பரீட்சையை நடத்தி ஆசிரியர் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.