மனிதப் படுகொலை ஒன்றுக்கு சதித் திட்டம் தீட்டிய சந்தேக நபர்கள் 5 பேரை மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 6ஆம் திகதி தெஹிவளை – வனரத்ன வீதிப் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே துப்பாக்கியால் சுட்டு ஒருவரைக் கொலை செய்து மற்றுமொருவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றத்திற்கு பழிவாங்கும் வகையில், தெஹிவளை பகுதியிலேயே இந்தக் கொலைத் திட்டம் தீட்டப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அதன்படி, ஒருவரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டுதல், அந்தக் குற்றத்திற்கு உதவுதல் மற்றும் தூண்டுதல், சட்டவிரோதமான அத்துமீறிய கும்பலின் உறுப்பினர்களாகச் செயல்படுதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக குறித்த ஐவரும் ரத்மலானை பகுதியில் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் பன்குலம, ரத்மலானை, பொரலெஸ்கமுவ மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்களில் பன்குலம பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரிடமிருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர் 2025.01.19 அன்று கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்தின் சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளதாகவும், அந்தக் குற்றம் தொடர்பாக கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், குற்றத்தைச் செய்யப் பயன்படுத்தத் தயாராக இருந்த ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத் தகட்டின் பதிவு இலக்கம் ஹோமாகம பொலிஸ் பிரிவில் திருடப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளுடையது என்றும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இன்று (11) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.