பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது ஜனன தினப் பெருவிழா நிகழ்வு, இலங்கை கொழும்பு புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள சாயி மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமாகியது.
இந்தத் திருவிழாவின் சிறப்பம்சமாக, ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது ஜனன தினத்தை முன்னிட்டு இலங்கை அரசின் விசேட தபால் முத்திரை வெளியீட்டு விழா சாயி மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்றது.
மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் ஆலோசனைகளுக்கு அமையவும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் வேண்டுகோளின் பேரிலும் இந்த விசேட தபால் தலை வெளியிடப்பட்டது.
தபால் தலை வெளியீட்டு விழாவில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், இலங்கை உயர் நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் எஸ். துரைராஜா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரபாகரன் குமாரரத்னம் ஆகியோருடன், சாயி மத்திய நிலையத்தின் இலங்கைத் தலைவர் எஸ். என். உதயநாயகன், இலங்கை தபால் திணைக்களத்தில் முத்திரை வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளர் லங்கா டி சில்வா, விளம்பரப் பிரிவு அதிகாரி எஸ். ஜலதீபன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
By C.G.Prashanthan