நுவரெலியா மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (01) வரை 75 பேர் உயிரிழந்துள்ளதோடு, 62 பேர் காணாமல் போயுள்ளனர்.
2,691 குடும்பங்கரளச் சேர்ந்த 12,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
1,914 குடும்பங்களைச் சேர்ந்த 8,654 பேர் 61 இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடைத்தங்கள் முகாம்கள் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குரன்கெத்த, அம்பேகமுவ, தலவாக்கலை, நோர்வுட், நில்தண்டாஹின்ன ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான மூன்று நாட்களுக்கான சமைத்த உணவு வழங்கப்படும். ஏனைய நாட்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு முகாம்களில் சமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.
அதேநேரம் நுவரெலியா – கண்டி வீதி, நுவரெலியா – இராகலை வீதி, நுவரெலியா – வெலிமடை வீதி, தலவாக்கலை – பூண்டுலோயா வீதி, லிந்துலை – அக்கரபத்தனை வீதி ஆகிய வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்திற்காக பயன்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகின்றது.
இதற்கு பதிலாக மாற்று பாதைகளையே பாவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் மாற்று பாதைகளும் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்ட நிலையிலேயே உள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல் நடைபெற்று வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் விவசாய நிலங்களும் முற்றாக பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.