நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் மற்றும் பதற்றநிலைமைகளைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் குழுவொன்று வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலரும் சிறைக்கூரை மீது ஏறி போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும், தற்போது அந்தப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், கைதிகள் முறையான ஒழுங்குவிதிகளுக்கு அமைய வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள ஆண் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றும் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள வசதிகளை ஆராய்ந்த பின்னரே இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அங்குணுகொலபெலஸ்ஸ, பூஸா மற்றும் வெலிக்கடை ஆகிய சிறைச்சாலைகளில் மூன்று கைதிகள் மரணமடைந்த சம்பவங்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அந்தந்த சிறைச்சாலைகள் அமைந்துள்ள பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் நிலையங்கள் ஊடாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் பூஸா சிறைச்சாலைகளுக்கு இடமாற்றப்பட்டிருந்த இரண்டு கைதிகள், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.