நோவா ஸ்கோஷியாவின் (N.S.) நியூ கிளாஸ்கோ (New Glasgow) பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட “சந்தேகத்திற்கிடமான” தீ விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதிகாலை 2:30 மணியளவில் ஹை ஸ்ட்ரீட்டில் (High Street) உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர மருத்துவ ஊர்தி (Ambulance) குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவனும் 20 வயதுடைய இளைஞன் ஒருவனும் வீட்டிற்குள் இருந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளனர், எனினும் தீ விபத்தினால் அந்த வீடு பலத்த சேதமடைந்துள்ளது.
புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதால், அந்தப் பகுதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகளின்படி இந்தத் தீ விபத்து சந்தேகத்திற்கிடமான ஒன்றாகக் கருதப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீ விபத்து குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 902-752-1941 என்ற எண்ணிற்குப் பொலிஸாரையோ அல்லது 1-800-222-TIPS (8477) என்ற எண்ணிற்கு ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Crime Stoppers) அமைப்பையோ தொடர்புகொண்டு அறிவிக்குமாறு புலனாய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.