நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடார் மாநில பாட்ஜர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளின் காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாட்ஜர் நகரம், எக்ஸ்ப்ளாயிட்ஸ், பாட்ஜர் மற்றும் ரெட் இந்தியன் ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை ஏற்பட்ட நீர்மட்ட உயர்வின் காரணமாக, அந்த ஆறுகள் கரைபுரண்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.
நேற்று சனிக்கிழமையன்று நீர்மட்டம் சில சென்டிமீட்டர் அளவிற்கு குறைந்திருந்தது. ஆனால் அது இன்னும் “உயர்ந்த நிலையில்” இருப்பதாக மேயர் டென்னிஸ் பட்ட் தெரிவித்தார். இது சுமார் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அளவிலான வெள்ள நிலைக்கு இணையானதாகும்.
குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து நீர்மட்டம் குறையும் நிலை காணப்பட வேண்டும் என்றும், அது ஆற்றின் கரை மட்டத்திற்கும் “குறிப்பிடத்தக்க அளவில் கீழே” இருக்க வேண்டும் என்றும் பட்ட் தெரிவித்தார்.
நிபுணர்கள் முன்னறிவிப்புகளை வழங்கி வரினும், ஆற்றின் தன்மை எந்த நேரத்திலும் எவ்வாறு மாறக்கூடும் என்பதை முன்கூட்டியே கணிப்பது கடினம் என அவர் கூறினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இரவில் குளிர்கால புயல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் பனிப்பொழிவால் ஏற்படக்கூடிய தாக்கங்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.