கேரள கஞ்சாவுடன் கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை – நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (15) இச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது தாய், தந்தை, மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இச்சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே நிந்தவூர் பொலிஸாரினால் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் நிந்தவூர் பகுதியில் கஞ்சா கடத்தல் வலையமைப்பை முறியடிக்கும் வகையில் பொலிஸார் விரிவான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது 302 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் கைதாகியுள்ளார். அவரின் தகவலுக்கமைய வீட்டின் பின்னால் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ கிராம் கேரளா கஞ்சா புதைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த பெண்ணின் கணவன் இதன்போது கைது செய்யப்பட்டதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலுக்கமைய அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் வட்டத்தின் முக்கிய நபராக அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களின் மகன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பொலிஸாரினால் கைதானார்.
இவ்வாறு கைதான சந்தேகநபரின் வாக்குமூலத்திற்கமைய அருகிலுள்ள வெற்று காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.7 கிலோகிராம் கேரளா கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டது.
அத்துடன் சந்தேகநபர்கள் விளக்கமறியல் மற்றும் தடுப்புக்காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.