அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் முற்றாக உடைந்த முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலத்தை, இலங்கை இராணுவ பொறியாளர்கள் புனரமைத்து, பிரதேசத்தின் அத்தியாவசிய போக்குவரத்து இணைப்பை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர்.
பாலம் இடிந்து விழுந்ததையடுத்து முல்லைத்தீவு – வெலியோயா, முல்லைத்தீவு – திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு – கொக்கிளாய் உள்ளிட்ட முக்கிய பாதைகளில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டு, பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டதுடன், பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அவசர நடவடிக்கையாக, கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இராணுவ பொறியாளர் படையினர் உடனடி பழுதுபார்ப்பு மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
120 அடி நீளமுடைய, 12 பேகள் கொண்ட, இரு வழி போக்குவரத்திற்கான ‘Compact 100’ கனரக பாலம் அமைக்கப்பட்டு, மக்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்காக பாலம் திறந்து வைக்கப்பட்டது.
இராணுவத்தின் துரிதமான பங்களிப்பினால், நாட்டின் வட பிராந்தியத்திலுள்ள இந்தப் பகுதியில் மீண்டும் போக்குவரத்து இயல்புநிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.