திருச்சியில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழ்நாட்டில் பேரவைக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் பிரசாரம், மக்கள் சந்திப்புக் கூட்டம், மாநாடு எனத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம், ஆலம்பட்டிபுதூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (பிப். 21) ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 பெண் மற்றும் 117 ஆண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 234 தொகுதிகளில் 40 பொறியாளர்கள், 33 வழக்கறிஞர்கள், 15 மருத்துவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
சீமான் தனது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
அவரைத் தவிர்த்து இடும்பாவனம் காா்த்திக், நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியிலும், திரைப்பட இயக்குநர் களஞ்சியம், ஆயிரம்விளக்கு தொகுதியிலும், வீரப்பன் மகள் வித்யாராணி மேட்டூர் தொகுதியிலும் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.