யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, யாழ்ப்பாணம் வரலாற்றுப் பாரம்பரியக் கோட்டையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொல்பொருள் புனர்நிர்மாணப் பணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோட்டையின் புனர்நிர்மாணப் பணிகளின் தற்போதைய முன்னேற்றம், வரலாற்று அம்சங்கள் பாதுகாக்கப்படும் விதம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் துறைசார் பொறியியலாளர்கள் அமைச்சருக்கு விரிவாக விளக்கமளித்தனர். பாரம்பரிய சின்னங்களைச் சிதையாமல் பாதுகாத்து, பணிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்