திமுகவை நம்பாதீங்க, உங்களை நம்ப வைத்து ஏமாத்துவது தான் வேலையே என்று தவெக தலைவர் நடிகர் விஜய் பேசினார்.
புதுச்சேரியில் உப்பளம் துறைமுக திடலில் தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டார். கரூர் துயரத்திற்கு பின்னர் திறந்த வெளி அரங்கில் முதல் முறையாக இன்று தான் அவர் பங்கேற்றார்.
பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது;
இந்த மத்திய அரசுக்கு தான் தமிழகம் ஒரு தனி மாநிலம். புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். அவர்களுக்கு தமிழகம் தனி, புதுச்சேரி தனி அப்படி என்று இருப்பார்கள். நமக்கு எல்லாம் அப்படி கிடையாது.
நாம் எல்லாரும் வேறு வேறு கிடையாது. நாம் எல்லோரும் ஒன்று தான். தமிழகமும், புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாம் எல்லோரும் ஒன்றுதான், சொந்தம்தான்.
வேற, வேற வீட்டில், வேற வேற மாநிலத்தில், வேற வேற நாட்டில் இருக்கிறோம் என்பதால் நாம் எல்லோரும் சொந்தங்கள் இல்லை என்று ஆகிவிட முடியுமா? அது எப்படி முடியும்? ஒருத்தரை ஒருத்தர் பார்க்கும் போது பாச உணர்வு, அது இருந்தால் போதும், வேறு எதுவும் தேவையில்லை.
உலகத்தில் எந்த இடத்தில் நம்ம வகையறா இருந்தாலும் அவர்கள் எல்லாரும் ஒன்றுதான். நமது உயிர்தான். புதுச்சேரி என்றால் உடனே ஞாபகம் வருவது மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம், வில்லியனூர் மாதா.
அதுமட்டுமல்ல, மகாகவி பாரதி இருந்த மண், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த மண். ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.
1977ல் எம்ஜிஆர் தமிழகத்தில் ஆட்சி அமைத்தார். ஆனால் அதற்கு முன்னரே 1974ல் புதுச்சேரியில், இங்கே அவர்கள்(அதிமுகவை குறிப்பிடுகிறார்) ஆட்சி இங்கே அமைந்தது. அதனால் தான் அப்பவே சொன்னார்கள் நமக்காக வந்தவர் எம்ஜிஆர். அவரை தமிழகத்தில் இருப்பவர்கள் மிஸ் பண்ணிவிட வேண்டாம் என்று நமக்கு அலர்ட் கொடுத்ததே புதுச்சேரி தான்.
அப்படிப்பட்ட புதுச்சேரியை மறக்கமுடியுமா? இங்கிருக்கும் மக்கள் தமிழகம் போலவே கிட்டத்தட்ட 30 வருஷம் என்னை தாங்கி பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதனால், இந்த விஜய் தமிழகத்திற்கு மட்டும் தான் குரல் கொடுப்பான் என்று நினைக்காதீர்கள்.
இந்த வருஷம் கூட மார்ச் மாதம் 27ம் தேதி ஒரு தீர்மானம் போட்டார்கள். அது மாநில அரசு வேண்டும் என்று கேட்டு, மத்திய அரசுக்கு அனுப்பும் 16வது தீர்மானம். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட 5 மில்கள், பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு இதுவரைக்கும் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.
பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கு எதுவுமே செய்யவில்லை. இங்கு ஒரு ஐ டி கம்பெனி உருவாக வேண்டும் என்ற எண்ணமே இல்லை. அதை பத்தி யார் பேசுனாலும் அது அவர்கள் காதில் விழவே இல்லை.
சுற்றுலாதலமான புதுச்சேரியில் போதுமான பார்க்கிங் வசதி இல்லை. போதுமான அளவு கழிப்பறை வசதி இல்லை. இதை எல்லாம் மேம்படுத்தணும்.
புதுச்சேரி, கடலூர் மார்க்கமாக ரயில் திட்டம் வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. புதுச்சேரி மக்களுக்கு ஒண்ணே ஒண்ணு நான் சொல்ல வேண்டும். இந்த திமுகவை நம்பாதீங்க… அவர்களுக்கு உங்களை நம்ப வைத்து ஏமாத்துவது தான் வேலையே.
நான் சொன்ன பல கோரிக்கைளை தீர்த்து வைப்பதற்கு நம்ம புதுச்சேரி அரசுக்கும், அதோட மக்கள் திட்டங்களுக்கும் உண்மையாக துணை நிற்க வேண்டும். தமிழகத்தை ஒதுக்குகிற மாதிரி, புதுச்சேரியையும் ஒதுக்கக்கூடாது என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் வாழும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மத்திய நிதிக்குழுவில் இடம்பெறவில்லை. அதனால் மாநிலங்களுக்கான நிதி பகிர்வு அடிப்படையிலும். யூனியன் பிரதேசங்களுக்கான நிதி பகிர்தல் அடிப்படையிலும் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படுவது இல்லை.
அதனால் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரிக்கு தோராயமாகவே மத்திய அரசு நிதியை விடுவிக்கிறது. அந்த நிதியும் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதிய திட்ட தொகை உள்ளிட்ட செலவுகளுக்கே சென்றுவிடுவதால் மீத தேவைக்கு வெளிச்சந்தையிலும், கடன் பத்திரங்களில் கடன் வாங்குகிறது புதுச்சேரி.
வரபோற புதுச்சேரி தேர்தல் களத்தில் நம்ம தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும். நம்பிக்கையாக இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு தவெக தலைவர் நடிகர் விஜய் பேசினார்.