‘ரோஜா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை மதுபாலா- சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘சின்ன சின்ன ஆசை ‘எனும் திரைப்படத்தின் புதிய தகவல்களை பிரத்யேக புகைப்படத்துடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அறிமுக இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா- மலையாள நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஜித் பாபுஜி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் புனித நகரமான வாரணாசியில் முழுவதுமாக நடைபெற்று நிறைவடைந்தது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டு பெரும் கவனத்தை கவர்ந்த நிலையில். தற்போது இப்படத்தின் செகண்ட் லுக்கை மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான மஞ்சு வாரியர் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
பிரத்யேகமாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த போஸ்டரில் கதையின் நாயகனும், நாயகியும் நீர்நிலை ஒன்றில் படகு சவாரி செய்து கொண்டு மனம் விட்டு பேசுவது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்து, உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் தமிழ் மற்றும் மலையாள மொழியில் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.