திரையுலகில் நிலையான இடத்தினை பெறுவதற்காக கடுமையாக தொடர்ந்து போராடிவரும் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ த்ரி கண்டா’ எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் மணி தெலகுட்டி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘த்ரி கண்டா’ எனும் திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன், அஜய், ஸ்ரத்தாதாஸ், சாஹிதி அவான்சா , வினோத், சஞ்சய், சாய் தீனா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பவன் சென்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் மற்றும் ஷாஜித் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளார்கள். புராண இதிகாசம் சார்ந்த திகில் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் வி எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்திருக்கிறார்.
விரைவில் தமிழ்- தெலுங்கு – இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் ‘த்ரி கண்டா ‘ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையின் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநரும், விமர்சகரும், ஆர்வலருமான கேபிள் சங்கர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாரூன் ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” குமரிக்கண்டம் எனும் பகுதியில் நடைபெறுவது போன்ற ஒரு புனைவு கதையாகத்தான் த்ரி கண்டவை உருவாக்கி இருக்கிறோம். த்ரி கண்டா என்பது அப்பகுதியை ஆண்ட மன்னரின் பெயராகும். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பிரம்மாண்டமாக இப்படம் தயாராகி இருக்கிறது” என்றார்.