இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடத்தப்பட்டுவரும் சம்பியன்ஸ் லீக் 2025-26 கால்பந்தாட்டத்தின் முதல் சுற்றில் ஏ குழுவில் சோண்டர்ஸ் கழகம் தோல்வி அடையாத ஒரே ஒரு அணி என்ற பதத்தைத் தக்கவைத்துக்கொண்டது.
செரெண்டிப் கழகத்திற்கும் சோண்டர்ஸ் கழகத்திற்கும் இடையில் சனிக்கிழமை (24) மாலை நடைபெற்ற போட்டி 3 – 3 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
போட்டியின் 8ஆவது நிமிடத்தில் ப்ரிம்பொங் யாவ் சுமார் 20 யார் தூரத்தில் இருந்து பலமாக உதைத்த பந்து கோலினுள் புக செரெண்டிப் கழகம் 1 – 0 என முன்னிலை அடைந்தது.
அதன் பின்னர் மத்திய கள வீரர் மொஹமத் ரஹுமான் இடதுபுறமாக பந்தை நகர்த்திச் சென்று சற்று கடினமான கோணத்திலிருந்து சிறப்பான கோல் ஒன்றை போட 17ஆவது நிமிடத்தில் செரெண்டிப் கழகம் தனது கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கிக்கொண்டது.
தொடர்ந்து விறுவிறுப்பையும் பரபரப்பையும் ஏற்டுத்திய இப் போட்டியின் இடைவேளையின்போது செரெண்டிப் கழகம் 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
இதன் காரணமாக சோண்டர்ஸ் கழகத்தின் தோல்வி அடையாத அணி என்ற பதம் அற்றுப் போய்விடும் என்ற நிலை உருவானது.
ஆனால், இடைவேளைக்குப் பின்னர் எதிர்நீச்சல் போட்டு விளையாடிய சோண்டர்ஸ் கழகம் 2 கோல்களைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தியது.
போட்டியின் 52ஆவது நிமிடத்தில் செரெண்டிப் வீரர் ரொஜர் பிலிப்பே பரிமாறிய பந்தை குளோவிஸ் ப்ரான்க் கோலாக்கினார்.
போட்டியின் 70ஆவது நிமிடத்தில் வலப்புறமாக பந்தை நகர்த்திச் சென்ற சோண்டர்ஸ் கழகத்தின் இளம் வீரர் பெத்தும் கிம்ஹானவை தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து செரெண்டிப் பின்கள வீரர் ஒருவர் முரணான வகையில் வீழ்த்தியதால் சோண்டர்ஸ் கழகத்திற்கு பெனல்டி வழங்கப்பட்டது.
அந்த பெனல்டியை ரொஜர் பிலிப்பே கோலாக்கி கோல் நிலையை சமப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றி கோலுக்காக கடுமையாக முயற்சித்தன.
போட்டியின் 81ஆவது நிமிடத்தில் விஜயகுமார் அபிஷான் சாமர்த்தியமாக பந்தை கோலினுள் புகுத்தி செரெண்டிப் கழகத்தை மீண்டும் முன்னிலையில் இட்டார்.
போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது டார்க்கோ ஜோர்ஜ் அநாவசியமாக மத்தியஸ்தர் ஏ.எம். ஜப்ரானின் இரண்டாவது மஞ்சள் அட்டைக்கு இலக்காகி சிவப்பு அட்டையுடன் மைதானத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
எனினும், துவண்டுவிடாமல் விளையாடிய சோண்டர்ஸ் கழகம் உபதையீடு நேரத்தில் (90 + 4 நி.) பெத்தும் கிம்ஹான் மூலம் கோல் நிலையை சமப்படுத்தி தோல்வி அடையாத அணி என்ற பதத்தைத் தக்கவைத்துக்கொண்டது.