அனர்த்த நிலைமையின் பின்னர் தொழில்சார் கல்வி முறைமையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான உபாயங்களை வகுத்தல் மற்றும் கல்விச் சீர்திருத்தச் செயல்திட்டத்திற்கு இணங்க தொழில்சார் கல்வியைப் பலப்படுத்துதல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில், நாராஹேன்பிட்டிய தொழில் கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது, தொழில்சார் கல்வித் துறையின் எதிர்கால மேம்பாட்டிற்காகத் தயாரிக்கப்பட்ட மூலோபாயத் திட்டம் குறித்து கவனம் செலுத்திய அமைச்சர், இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் தொழில்சார் கல்வியை மேம்படுத்துவதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து அதிகபட்சப் பலனைப் பெறும் வகையில் ஒவ்வொரு தொழில்சார் கல்வி நிறுவனமும் தமது பொறுப்பைக் கைவிடாது ஒழுங்கமைப்போடு செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் சேதமடைந்த தொழிற்பயிற்சி நிறுவனங்களை விரைவாக வழமை நிலைக்குக் கொண்டுவருதல், மாணவர்கள் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும், தொழில்சார் கல்வி கற்கும் மாணவர்களின் தொழில்சார் திறமைகளையும் நிபுணத்துவத்தையும் நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் எவ்வாறு பங்களிப்புச் செய்ய வைப்பது என்பது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர்
நாலக களுவெவ உட்பட தொழில் கல்விப் பிரிவின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
By C.G.Prashanthan