பொங்கல் தினத்தையொட்டி யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, விசேட பூஜைகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட “பொங்கல் விழா“ இன்று (15) வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (ஐயனார் கோவில்) முன்றலில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டுள்ளார்.
இதன்போது, பொங்கல் பானையில் அரிசியிட்டுப் பொங்கலை ஆரம்பித்து வைத்துள்ளார்.
அத்துடன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் மேற்குறித்த நிகழ்வை பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
”யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) பிற்பகல் நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டேன்.
தமிழ் மக்களின் மிக முக்கியமான கலாசார தினமான தைப் பொங்கல் விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என இங்கு குறிப்பிட்டதுடன், ஒரு நாடு அழகாக இருக்கவும், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் ஒவ்வொரு கலாசாரத்தையும் மதித்து ஏற்றுக்கொள்வது முக்கியம் என்றும் தெரிவித்தேன்.
மேலும், இந்நாட்டின் வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது என்றும் சுட்டிக்காட்டினேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்.மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் “பொங்கல் சங்கமம்” எனும் தொனிப்பொருளில் தைப்பொங்கல் விழா இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் சுற்றுலாப்பணியகத்தின் கண்காட்சியையும் பார்வையிட்டார்.
இதனையடுத்து அங்கு நடைபெற்ற பொங்கல் கலைநிகழ்வுகளையும் கண்டு களித்துள்ளார்.