தேர்தலுக்குச் செலவு செய்த புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காகவே இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கும் அரசாங்கம், கடற்படை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தேசத்துரோக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா அண்மையில் ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காகப் பெயரிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பதினொரு தமிழர்களின் பெயர்களை அந்த வர்த்தமானி அறிவிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர், அவர்கள் தடைசெய்யப்பட்ட நபர்களாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தனர். வர்த்தமானி அறிவிப்பிலிருந்து அந்த 11 பெயர்களையும் நீக்கி, அவர்களை அந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தவர், ஜனாதிபதி அநுர குமாரவின் கீழ் உள்ள பாதுகாப்புச் செயலாளராவார் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.
குறித்த நபர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உத்தரவுகளுக்கமையவே பட்டியலிடப்பட்டிருந்தனர். அதாவது, இவர்கள் பயங்கரவாதத்திற்குப் பணம் அனுப்பினர், பணச் சலவையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் சர்வதேச ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான பாரதூரமான குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒரு குழுவைத்தான் பாதுகாப்பு செயலாளர் அவற்றிலிருந்து விடுவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமாரவின் அனுமதியின்றி பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா இதைச் செய்திருக்க மாட்டார்.
குறித்த 11 பேருக்கு, பயங்கரவாதத்திற்குப் பணம் சேகரித்தல், பணச் சலவை போன்ற சர்வதேச ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தும், தடைசெய்யப்பட்ட நபர்களின் பட்டியலிலிருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்படுகின்றன. அதாவது, அவர்கள் இப்போது இலங்கைக்குள் சுதந்திரமாக வந்து போகலாம். அவர்கள் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடலாம். தேவைப்பட்டால் பயங்கரவாதத்திற்கு மீண்டும் பணம் அனுப்பலாம்.
அந்தச் சுதந்திரத்தை அந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்குக் கொடுத்துவிட்டு, இங்கே பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, பாதுகாப்புப் படைகளைக் குறிவைத்து, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவை தொடர்பில் கேள்வியெழுப்பினால் இராணுவ வீரர்கள் பழிவாங்கப்படுகின்றனர் எனக் கூற வேண்டாமென ஜனாதிபதி எம்மை எச்சரிக்கின்றார்.
தேர்தலுக்குச் செலவு செய்த தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு செயற்படுகின்றார். செல்லுபடியான குற்றச்சாட்டுகளைக் கொண்ட புலிகளைத் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கும் அரசாங்கம், இங்கு வந்து, கடற்படை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. இந்த தேசத்துரோக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இப்போது அமெரிக்காவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இவ்வாறு பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையை ஒரு பங்காளியாக ஆக்குகிறார்கள். மறுபுறம், புலிகளின் தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளவர்களை நீக்குகிறார்கள். இன்னொரு புறம், பாதுகாப்புப் படையினர், கடற்படையினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, சட்டத்தை அமுல்படுத்துவதாகக் கூறி அவர்களை பழிவாங்குகின்றனர் என்றார்.