தேசிய பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஊடகங்கள் செயற்பட்டால் சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ஒருசில ஊடகங்கள் குறித்து அமைச்சர் லால் காந்த உட்பட பலர் ஊடகத்துறை அமைச்சுக்கு முறைப்பாடளித்துள்ளார்கள். ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஊடகங்கள் போலியான செய்தியை வெளியிட்டால் நாட்டு மக்கள் எவரும் அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஒருவரின் தனிப்பட்ட விடயங்களை செய்தியாக வெளியிட முடியாது.
தொலைக்காட்சி ஊடக நிறுவனங்கள் அனுமதிபத்திர நிபந்தனைகளை மீறினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். தேசிய பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் இன நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட முடியாது.
ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடும் போது அவற்றை திருத்திக் கொள்ள வேண்டும்.அவ்வாறான தவறான செய்திகளால் எவரேனும் பாதிக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளுக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைச்சர் லால் காந்த உட்பட பலர் ஒருசில ஊடக நிறுவனங்கள் மற்றும் ஒளிபரப்பப்பட்ட செய்திகள் குறித்து ஊடகத்துறை அமைச்சில் முறைப்பாடளித்துள்ளார்கள். ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றார்.