‘ஆட்சியில் பங்கு தர வேண்டும்; இல்லையெனில், 5 ராஜ்யசபா எம்.பி. பதவி தர வேண்டும்’ என்று காங்கிரஸ் மேலிடம் விதித்துள்ள நிபந்தனையால் தி.மு.க. தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி, லோக்சபாவில் பெரும்பான்மை பெறாவிட்டாலும், ராஜ்யசபாவில் அதிக எம்.பி.க்கள் உள்ள கட்சியாக இருந்தது. இதனால், பார்லிமென்டில் மத்திய அரசுக்கு சுலபமாக இடைஞ்சல் உண்டாக்க முடிந்தது.
ஆனால், இப்போது கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே, காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
இதனால் 245 எம்.பி.க்களை கொண்ட ராஜ்யசபாவில், காங்கிரசுக்கு 27 பேர்தான் உள்ளனர். அதை அதிகரிக்க, பல்வேறு வியூகங்களை காங்கிரஸ் வகுத்து வருகிறது.
நீண்டகாலமாக, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வென்று தான், தி.மு.க. ஆட்சி அமைத்தது. 2006ல் தி.மு.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காமல், காங்கிரசின் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன்தான், தி.மு.க. ஆட்சி அமைத்தது. ஆனால் காங்கிரசுக்கு அமைச்சரவையில் பங்கு தரவில்லை.
அடுத்த ஆண்டு தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு தராது என காங்கிரசுக்கு தெரியும். இதனால், ‘லோக்சபா தேர்தலில், நான்கில் ஒரு பங்கு தொகுதியை, அதாவது 39க்கு 9 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கினீர்கள்.
அதுபோல, ராஜ்யசபாவிலும் நான்கில் ஒரு பங்கு, அதாவது 18க்கு நான்கு அல்லது ஐந்து தொகுதிகளை தர வேண்டும்’ என, நிபந்தனை விதித்துள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த தி.மு.க. மேலிடம், அது சாத்தியமில்லை என்று கூறியுள்ளது. ஆனாலும், காங்கிரஸ் விடுவதாக இல்லை. தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், ஒரு பக்கம் த.வெ.க.வுடனும் பேச்சு நடத்த துவங்கியுள்ளது.