திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தி.மு.க., அரசை கண்டித்து, தமிழகம் முழுதும் ஹிந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் கோயம்பேடு 100 அடி சாலையில், ஹிந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் தலைமையில், சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
ஆனால், போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறி, அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது சிலர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வந்த பேருந்தை வழி மறித்தனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி சென்றபோது, சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த ஒருவரது மாலை அறுந்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஹிந்து முன்னணி மாநில செயலர் சேவுகன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். பெண்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையை அடுத்த எழுமலை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கைதாகினர். தமிழக அரசை கண்டித்தும், நீதிபதி சுவாமிநாதனை விமர்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கோவையில் ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செல்வபுரம் சாலை, சிவாலயா சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். செட்டி வீதி சந்திப்பில் ஹிந்து மக்கள் கட்சியினர், சாலையில் அமர்ந்து, ‘தி.மு.க.,வை தடை செய்ய வேண்டும்’ என கோஷமிட்டனர்.
அர்ஜுன் சம்பத் கூறுகையில், ”நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தி.மு.க., அரசை ‘டிஸ்மிஸ்’ செய்யக் கோரியும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.