ரிச்சர்ட் ரிஷி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரௌபதி 2’ படத்தின் பிரத்யேக போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘திரௌபதி 2’ எனும் திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி முதன்மையான கதாபாத்திரத்தில் அரசராக தோன்றி நடிக்கிறார். இவருடன் ரக்க்ஷனா இந்து சுதன், நட்டி நடராஜ், வை. ஜி. மகேந்திரன், இயக்குநரும், நடிகருமான சரவண சுப்பையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிலிப் ஆர். சுந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சரித்திர கால கட்டத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நேதாஜி புரொடக்ஷன் மற்றும் ஜி எம் பிலிம் கொர்ப்பரேசன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சோழ சக்கரவர்த்தி மற்றும் மோகன் ஜி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரை கௌரவிக்கும் வகையில் படத்தின் பிரத்யேக தோற்றத்தை படக்குழுவினர் புகைப்படமாக வெளியிட்டுள்ளார்கள்.