குப்பை கொட்டும் விவகாரத்துக்கு தீர்வு கோரி நடந்த போராட்டத்தில், பங்கேற்ற தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாநகரில் சேரும் குப்பையை இடுவாய், சின்னகாளிபாளையம் கிராமத்தில் கொட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது. கட்டுப்பாடுகளுடன் கொட்ட, கோர்ட் அனுமதி வழங்கியது.
குப்பையை பிரித்து கொட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, குப்பையை கொட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேல்முறையீடு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அந்தப் பகுதியில் குப்பைக் கொட்டக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் குப்பை கொட்ட சென்ற லாரிகளை கிராம மக்கள் தடுக்க முயன்ற போது, போலீசார் – பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற போது, மக்கள் தரப்பில் மண்டை, கை, கால் உடைப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 10 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், குப்பை விவகாரத்துக்கு தீர்வு காணக்கோரி பொது மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜவினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.