மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் தீபத்துாணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும் கலெக்டரின் 144 தடை உத்தரவு, மேல் முறையீட்டு மனுவை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்தனர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி பக்தர்களும், ஹிந்து அமைப்பினரும் போராட்டம், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரவு வரை திருப்பரங்குன்றத்தில் பதற்றம் நீடித்தது. இரவு 9:30 மணிக்கு மலைப்பாதை முன்பு ரோட்டில் மனுதாரர் ராமரவிக்குமார் தலைமையில் கார்த்திகை தீபம் ஏற்றி, ‘நிச்சயம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம்’ என ஹிந்து அமைப்பினர் சூளுரைத்தனர்.
நேற்று காலை 16 கால் மண்டபம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய வைரத் தேரில் முத்தங்கி அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. தீபம் ஏற்ற அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, மதுரை தி.மு.க., வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி சார்பில் வழங்கிய 4 அடி உயரம், மேல்பகுதி இரண்டரை அடி அகலத்திலும், அடிப்பகுதி ஒன்றே முக்கால் அடி அகலத்திலும், 70 கிலோ எடையில், 450 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தாமிர தீப கொப்பரைக்கு பூஜை நடந்தது.
பின்பு தாமிரக் கொப்பரை, நெய், திரி, சூடம் ஆகியவை மலை மேல் வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மண்டபத்தின் மேல் கொப்பரை வைத்து நெய் ஊற்றி திரி அமைத்து தீபம் ஏற்ற தயாராக வைத்தனர்.