”தமிழக அரசின் செயல்பாடுகளாலும், அலட்சியத்தாலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடல் அரிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது,” என, மதுரையில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன் குற்றம்சாட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது: தி.மு.க., அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டுவதால் கோயில்களில் பல்வேறு பிரச்னைகள் எழுந்து வருகின்றன. திருச்செந்தூர் கடற்கரையை ஒட்டி சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கோயிலில் இருந்து சில கி.மீ., துாரத்தில் கடலுக்குள் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு காரணமாக கடல் நீரோட்டத்தில் மாறுபாடு ஏற்பட்டு கோயில் அருகே கடல் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
இந்நிலை நீடித்தால் கோயிலுக்கு பாதுகாப்பில்லை. பக்தர்கள் கடலில் இறங்கி புனித நீராட முடியாத நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு உடனடியாக கடலுக்குள் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவை மாற்றி அமைக்க வேண்டும். கோயிலை காப்பாற்றிடவும், பாதுகாக்கவும் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தூண்டில் வளைவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். தவறினால் அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.