திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் ஆயுள் அங்கத்துவப் பதிவு நடைமுறையால் பாதிக்கப்பட்ட பக்தர்கள், தற்போதைய நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு எளிமையான, வெளிப்படையான மற்றும் மக்கள் நட்பு முறையை அறிமுகப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் விடுத்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் ஆயுள் அங்கத்துவத் திட்டம் பாராட்டத்தக்க ஒன்றாக இருந்தாலும், தற்போது நடைமுறையில் உள்ள விண்ணப்ப முறை பக்தர்களுக்கு தேவையற்ற அலைச்சல், நேர விரயம் மற்றும் கூடுதல் செலவுகளை ஏற்படுத்துவதாகும்.
தற்போதைய நடைமுறையின்படி, விண்ணப்பப் படிவங்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டுமே வழங்கப்படுவதுடன், விண்ணப்பதாரர் நேரில் வந்து மட்டுமே விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மீண்டும் நேரில் வந்து விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டியதுடன், கிராம அலுவலரின் பரிந்துரையையும் பெற்றிருக்க வேண்டும்.
அதன் பின்னர் உறுப்பினர் அடையாள அட்டையைப் பெறவும் கட்டணத்தைச் செலுத்தவும் மீண்டும் ஆலயத்திற்கு அல்லது ஆலய அலுவலகத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் ஒரு பக்தர் ஆயுள் அங்கத்துவத்தைப் பெறுவதற்காக குறைந்தபட்சம் மூன்று தடவைகள் ஆலயத்திற்கு அல்லது ஆலய அலுவலகத்திற்கு வர வேண்டியுள்ளதாகவும், இது குறிப்பாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் திருகோணமலைக்கு வெளியே வசிப்பவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆலய யாப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆயுள் அங்கத்தவர்களின் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தற்போது விண்ணப்பங்கள் ஜூலை 15 ஆம் திகதிக்குப் பின்னர் பெறப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டால், ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் உறுப்பினர் பட்டியலை எவ்வாறு தயாரித்து காட்சிப்படுத்த முடியும் என்பது தொடர்பாக பக்தர்கள் நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளனர்.
அத்துடன், ஆயுள் அங்கத்துவ விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டுமே வழங்குதல், விண்ணப்பதாரர் பல தடவைகள் நேரில் வர வேண்டும் எனக் கட்டாயப்படுத்துதல், கிராம அலுவலரின் பரிந்துரையை கட்டாயமாக்குதல் போன்ற நடைமுறைகளுக்கு ஆலய யாப்பில் எந்தவொரு ஏற்பாடும் இல்லை என்றும், அவ்வாறான நடைமுறைகள் எந்த அடிப்படையில் அமுல்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.