தாய்லாந்தில் இடம்பெற்ற பயங்கர ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிலிருந்து வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள உபோன் ராட்சதானி மாகாணத்தை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் 195 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த ரயில், நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சிக்கியோ மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது.
அப்பகுதியில் அதிவேக ரயில் பாதை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அதற்காக பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் ஒன்று திடீரென சரிந்து ரயிலின் மீது விழுந்துள்ளது.
இதன் விளைவாக ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததுடன், சில பெட்டிகள் முற்றாக நொறுங்கின. மேலும் விபத்துக்குப் பின்னர் ரயிலில் தீப்பற்றியதால் நிலைமை மேலும் மோசமடைந்தது.
விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மீட்புக் குழுவினர் மற்றும் அவசர சேவையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
ஆரம்பத்தில் 22 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்த மீட்புப் பணிகளின் போது பலி எண்ணிக்கை தற்போது 32 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக தாய்லாந்து பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.