தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்து வெளிநாட்டு செல்வதற்கு பயணத்தடை விதித்துள்ளது.
குறித்த உத்தரவானது நேற்று(15.12.2025) பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி வரை நீதவான் வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 23ஆம் திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து இந்த தேரர் தெரிவித்த வன்முறையான கருத்துக்கு எதிராக 27.10.2023இல் கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் ( (International Covenant on Civil and Political Rights) சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.
குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கியது.
இந்த நிலையில் குறித்த வழக்கு கடந்த 08.12.2025 திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குறித்த தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி குறித்த தேரர் இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கட்டளையிட்டார
இந்த நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் குறித்த வழக்கு விசாரணைக்காக நேற்று திங்கட்கிழமை 15ஆம் திகதி எடுத்து கொண்டபோது தேரர் முன்னிலையாகாத நிலையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சார்பாக முதலாம் தரம் கொண்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், மட்டு.தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையாகினார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் அதனால் நீதிமன்றில் இன்று முன்னிலையாக முடியவில்லை எனவும் குறித்த தேரர் தங்கியிருக்கும் மற்றும் மறைந்திருக்கும் இடம் என சந்தேகிக்கப்படும் மங்களகம கௌவ்லியாமடு மற்றும் சின்னவத்தை விகாரை பகுதிக்கு தேடிச் சென்றதாகவும் அவர் அங்கு இல்லை எனவும் அவர் மறைந்திருக்கும் இடத்தை தேடி வருவதாகவும் நீதவானிடம் தெரிவித்தார்.
இதையடுத்து நீதவான் தேரரை கைது செய்வதற்காக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பித்து அவர் வெளிநாடு செல்வதற்கு பயண தடை விதித்து கட்டனை பிறப்பித்து எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி வழக்கை ஒத்திவைத்தார்.