வடகிழக்கு பருவமழை கொட்டியும், 16 அணைகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டிஉள்ளன.
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி., இவற்றில் மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட 15 அணைகள், கொள்ளளவில் பெரியவை.
இவற்றின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி., மற்ற அணைகள் 1 டி.எம்.சி.,க்கும் குறைவான கொள்ளளவு உடையவை.
அதிக மழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தான், பெரும்பாலான அணைகள் உள்ளன. இவற்றுக்கு தென்மேற்கு பருவமழை காலங்களில், அதிக அளவில் நீர் வரத்து கிடைக்கிறது.
அண்டை மாநிலங்களான, கேரளா, கர்நாடகா வழியாகவும் பல அணைகளுக்கு நீர்வரத்து கிடைத்து வருகிறது. தற்போது, மாநிலம் முழுதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் புழல்; தர்மபுரியில் நாகாவதி, வறட்டாறு; கிருஷ்ணகிரியில் சூளகிரி சின்னாறு; திருப்பத்துாரில் ஆண்டியப்பனுார் ஓடை; வேலுாரில் மோர்தானா, ராஜா தோப்புகனார்.
தென்காசியில் குண்டாறு, அடவிநைனார் கோவில்; தேனியில் சோத்துப்பாறை; திண்டுக்கல்லில் வர்தமாநதி, குதிரையாறு; ஈரோட்டில் குண்டேரிபள்ளம், பெரும்பள்ளம்.
கோவையில் பரம்பிக்குளம், துணக்கடவு பெருவாரிபள்ளம் ஆகிய 16 அணைகள், 96 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன. திருவள்ளூர் பூண்டி, தேர்வாய் கண்டிகை; காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம்; தர்மபுரி சின்னாறு, வாணியாறு; திருவண்ணாமலை சாத்தனுார்.
திண்டுக்கல் மருதாநதி; கோவை ஆழியாறு; ஈரோடு பவானிசாகர்; கரூர் நொய்யல் ஆத்துப்பாளையம்; சேலம் மேட்டூர் ஆகியவற்றில், 90 முதல் 95 சதவீதம் நீர் இருப்பே உள்ளது.
மேலும் 76 சதவீதத்திற்கு மேல் 29 அணைகள், 51 சதவீதத்திற்கு மேல் 19 அணைகள், 25 சதவீதத்திற்கு மேல் 15 அணைகள் நிரம்பிஉள்ளன.
மொத்தமுள்ள 90 அணைகளில், 196 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. பருவமழை இம்மாதம் இறுதி வரை உள்ளதால், அணைகளுக்கு மேலும் நீர்வரத்து கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.