ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்று (21) எதுல்கோட்டேயிலுள்ள தலைமையகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட கருத்துக்களின் தொகுப்பு வருமாறு:
“சுமார் ஒரு வருட காலமாக அரசாங்கத்தினால் ஒரு நிரந்தர கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்க முடியாமல் போயுள்ளது. அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படும் பெயர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அரச சேவையில் அரசியல் தலையீடற்ற, தகுதியான அதிகாரிகளையே நியமிப்போம் என்று தேசிய மக்கள் சக்தி மேடைக்கு மேடை கூறியது. ஜனாதிபதியின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கை பிரகடனத்தின் 197-வது பக்கத்திலும் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு அனுபவமற்ற, இராணுவப் பின்னணி கொண்ட மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நபர்களை நியமிக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார். அவர் முதலில் பரிந்துரைத்த நபரை அரசியலமைப்பு சபை நிராகரித்தது. இரண்டாவதாக பரிந்துரைத்தவர் வாகன துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். இவ்வாறானவர்களை இந்தப் பதவிக்கு கொண்டுவர ஜனாதிபதி ஏன் இவ்வளவு பிரயத்தனம் எடுக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.
தற்போதைய பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் நிலைப்பாடு
“தற்போது பதில் கடமையாற்றும் அதிகாரி கணக்காய்வாளர் திணைக்களத்தில் 30 வருட அனுபவம் கொண்டவர். கடந்த கால ஊழல்களை கோப் (COPE) மற்றும் கோபா (COPA) குழுக்களில் வெளிப்படுத்தியவர் அவரே. அவர் நிரந்தர பதவிக்கு தகுதியற்றவர் என்றால், பதில் பதவிக்கு மட்டும் எப்படி தகுதியானவர்? 2025-ம் ஆண்டு முதல் இந்த அரசாங்கத்தின் கொடுக்கல் வாங்கல்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும். தனது அரசாங்கத்தின் ஊழல்களை மறைக்கவே ஜனாதிபதி தமக்கு விசுவாசமான ஒருவரை நியமிக்கத் துடிக்கிறார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.”
‘ரீ-பில்டிங் ஸ்ரீலங்கா’ நிதியம் மற்றும் வெளிப்படைத்தன்மை
“அனர்த்தங்களின் போது நிதியங்களை உருவாக்குவது குறித்து 2005-ம் ஆண்டு அனர்த்த மேலாண்மை சட்டத்தில் தெளிவான விதிமுறைகள் உள்ளன. ஆனால், ஜனாதிபதி அவற்றை விடுத்து ‘ரீ-பில்டிங் ஸ்ரீலங்கா’ (Re-building Sri Lanka) எனும் பெயரில் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறாத ஒரு நிதியத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த நிதியத்தின் இணையதளத்தில் குழு உறுப்பினர்களின் விவரங்கள் உள்ளனவே தவிர, சேகரிக்கப்பட்ட பணத்தின் அளவு குறிப்பிடப்படவில்லை. மாறாக, அனூராத திஸாநாயக்கவின் தனிப்பட்ட முகநூல் பக்கத்தில் இது குறித்த தகவல்கள் பதிவிடப்படுகின்றன. ஜனாதிபதியின் முகநூல் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தளம் அல்ல. கடந்த காலங்களில் உருவான ‘இடுகம’ மற்றும் ஜே.வி.பி-யின் ‘ரது தருவ’ போன்ற நிதியங்களுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. எனவே, இந்த நிதியத்தை நாடாளுமன்றத்தின் கண்காணிப்புக்கு கொண்டு வருமாறு வலியுறுத்துகிறோம்.”
இந்தியாவுடனான சுகாதார ஒப்பந்தம்
“இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களில் சுகாதாரத்துறை சார்ந்த ஒப்பந்தமும் ஒன்று. ஆனால் இதன் உள்ளடக்கத்தை அரசாங்கம் இன்னும் நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரினாலும் அவை வழங்கப்படவில்லை. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரம் குறித்து மக்களுக்கு ஐயப்பாடுகள் உள்ளன. எனவே, இந்த ஒப்பந்தத்தின் மூலம் எவ்வளவு மருந்துகள், எத்தகைய மருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன என்பதை அரசாங்கம் உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும்.”
அனர்த்த நிவாரணப் பணிகள்
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை சஜப எதிர்க்கவில்லை. ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் திட்டங்களை வரவேற்கிறோம். ஆனால், அந்த உதவிகள் இன்னும் தரைமட்டத்தில் உள்ள மக்களுக்கு முறையாகச் சென்றடையவில்லை. வெளிநாடுகளிலிருந்தும் உள்நாட்டு வர்த்தகர்களிடமிருந்தும் கிடைக்கும் உதவிகள் விநியோகிக்கப்படுவதில் குறைபாடுகள் உள்ளன. ஜனாதிபதி காணும் கனவை நனவாக்க எதிர்க்கட்சி எப்போதும் ஒத்துழைப்பு வழங்கும், ஆனால் அவை வெறும் கனவுகளாக மாத்திரம் இருந்துவிடக்கூடாது.
By C.G.Prashanthan