டொரோண்டோவில் இடம்பெற்ற ஊழல் குற்றவாளியான காவல்துறை அதிகாரி ஒருவரின் வீடு விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி வீடும் ஊழல் மோசடி வழக்கு விசாரணைக்குள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
56 வயதான கான்ஸ்டபிள் திமோத்தி பார்ன்ஹார்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில், காவல் துறை சீருடைகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தமை, சட்டவிரோத கஞ்சா விற்பனை நிலையங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக லஞ்சம் பெற்றமை, குற்றவாளிகளுக்கு ரகசிய தகவல்களை கசியவிட்டு துப்பாக்கிச் சூடுகளை ஏற்படுத்த உதவியது போன்றவை அடங்கும் என விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பார்ன்ஹார்ட் மீது 17 குற்றச்சாட்டுகள் இதுவரை சுமத்தப்பட்டுள்ளன என்பதோடு இந்த மாதத் தொடக்கத்தில் அவருக்குப் பிணையும் மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
பார்ன்ஹார்டின் மிசிசாகா, ஒன்டாரியோ பகுதியில் அமைந்துள்ள மூன்று படுக்கையறைகள் கொண்ட டவுன்ஹவுஸ் கடந்த புதன்கிழமை சுமார் 700,000 டொலர்களுக்குக் குறைவான விலைக்கு வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.