தமிழகத்தில் டிச.17ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகாலையில் பனிமூட்டம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் டிசம்பர் 17ம் தேதி வரை தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 15ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.