தென்னிந்திய நட்சத்திர நடிகரான சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிக்மா’ படத்தில் இடம்பெற்ற ‘சிக்மா ஸ்டைல்’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிக்மா’ படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், ராஜூ சுந்தரம், அன்பு தாசன், யோக் ஜேபி, மகாலட்சுமி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜே எஸ் ஜோ மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது.
தமிழக முதல்வர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் தருணத்தில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆயே ஆயே சிக்மா..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் சுப்பர் சுப்பு எழுத றாப் பாடகர்கள் ஸ்மைல் துபகீஸ் – எம். சி. ரூட் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
மேலத்தேய நாள் லய பின்னணியில் றாப் இசையுடனான இந்த பாடல் இளைய தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.