நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (08) காலை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி பின்வருமாறு தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் 19,780 குடும்பங்களைச் சேர்ந்த 63,121 பேர் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, நிவாரணம் வழங்குவது மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் காரணமாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட முடிந்ததாக தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளமைக்கும் திட்டத்தை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்கும், இதுபோன்ற பேரழிவு மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதில் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அவர்களின் அன்றாட வாழ்க்கையை மீளமைக்கவும், நுவரெலியா மாவட்டத்தில் மின்சாரம், நீர் வழங்கல், தகவல் தொடர்பு, நீர்ப்பாசனம் உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து ஜனாதிபதி இங்கு விரிவாக ஆராய்ந்தார்.
காய்கறி மற்றும் உருளைக்கிழங்கு பயிற்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் பயிற்செயகைகளை மீண்டும் தொடங்குவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. நுவரெலியா மாவட்டத்தில் காய்கறி அறுவடை 25% மட்டுமே குறைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
நுவரெலியா மாவட்டத்தால் நாளாந்த காய்கறி விநியோகத்தை மேற்கொள்ள முடியுமான போதிலும், தற்போது நாளாந்த மரக்கறித் தேவையில் வீழ்ச்சி காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் காய்கறி பற்றாக்குறை இருப்பதாகவும், விலைகள் அதிகரித்துள்ளதாகவும் வெளியான தவறான செய்தியே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
காய்கறி பயிற்செய்கைக்கு ஏற்பட்ட சேதம், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்குச் சொந்தமான காணியின் அளவு குறித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் காய்கறி பயிற்செய்கை ஆரம்பிப்பதற்காக மரக்கறி விதைகளை வழங்கும் நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
விதைகளின் விலை அதிகரிப்பு காரணமாக உருளைக்கிழங்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
நுவரெலியா மாவட்ட வீதிக் கட்டமைப்பை மீளமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டம் மற்றும் அதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. மக்களின் போக்குவரத்து வசதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அந்த புனரமைப்புப் பணிகளை துரிதமாக நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மாகாண வீதிகள் மற்றும் பிரதேச சபைகள் போன்ற எந்த நிறுவனத்தின் கீழும் வராததால் 611 தோட்டங்களுடன் தொடர்புடைய வீதிகள் புனரமைக்கப்படாதிருப்பது குறித்து இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. தோட்ட கம்பனிகளுக்குச் சொந்தமான ஆனால் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் மற்றும் முக்கிய நகரங்களுடன் இணைக்கும் அனைத்து வீதிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்று உடனடியாக புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி இதன் போது அறிவுறுத்தினார்.
பெரும் போகத்தில் நெல் வயல்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடிய வகையில் நீர்ப்பாசனக் கட்டமைப்பை உடனடியாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதோடு கொத்மலை நீர்த்தேக்கம் தொடர்பாக எழுந்துள்ள நிலைமை குறித்து ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதே வேளை அகரபத்தன பாலம் இடிந்து விழுந்ததால், மக்களுக்கு மேலதிகமாக 8 கி.மீ.தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்றும், பாலத்தை உடனடியாகப் பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மலைநாட்டின் ஊடாகச் செல்லும் வீதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், அவற்றை துரிதமாக மறுசீரமைத்து அபிவிருத்தி செய்வதற்காக திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி இதன் போது அறிவுறுத்தினார்.
கிரிகரி வாவி மதகின் தொழில்நுட்ப செயல்பாடுகளை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவருவது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தை மீளமைக்கும் திட்டம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதோடு எழுந்துள்ள பணியாளர் தட்டுப்பாடுகளை தற்காலிகமாக பூர்த்தி செய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த 551 பாடாசலைகளில் 490 பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதிக்குள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பிக்க முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அன்றைய தினம் முடிந்தளவு பாடசாலைகளை தொடங்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, டிசம்பர் 16 ஆம் திகதி தொடங்க முடியாத பாடசாலை மாணவர்களை அருகிலுள்ள பாடாசலைகளுக்கு அனுப்பவும், அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்கவும் பணிப்புரை வழங்கினார்.
அத்தோடு வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார வசதிகளின் செயல்பாடு குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. மருத்துவ விடுதிகள் சேதமடைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இதன் போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டதோடு அந்த வசதிகளை வழங்குவதற்கு ஏற்ற வேறு கட்டிடங்களை அடையாளம் கண்டு அறிவிக்குமாறும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னர் அதனை விடுவிக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் போதுமான பணியாளர்கள் இல்லாததால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. கடந்த 05 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை அதற்காக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்குமாறும் அது குறித்த தகவல்களை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி இதன் போது அறிவுறுத்தினார்.
வீடுகளை இழந்த மக்களுக்கான இழப்பீடு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் நாட்டின் இதயமாக விளங்கும் மத்திய மலையகத்தை பாதுகாக்கவும் நீண்டகால வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தினார்.
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மற்றும் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி, நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.ஜி. விஜேரத்ன, கே. கலைச்செல்வி, அனுஷ்கா திலகரத்ன, வி. ராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள், நுவரெலியா மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதானிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
By C.G.Prashanthan