டித்வா சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று அனர்த்த தகவல் மையம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முடிந்த மட்டத்தில் ஏதேனும் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் இந்த மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மையம் ஊடாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டி, பொறுப்போடும் வகைகூறலோடும் வெளிப்படையாகவும் நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் முகமாக உரிய தரப்போடும், நிவாரண குழுக்களோடும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் அறியாமை, அரசியல் காரணங்கள் போன்றவற்றால் நிவாரணம் கிடைக்காத சூழ்நிலை காணப்படுவதனால், இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்வோர் குறித்த பிரச்சினைகள் முன்வைத்து நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் இந்த மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அடிப்படையில் நிவாரண உதவிகள் கிடைக்கப்பெறாத தரப்பினர்களுக்கு இந்த மையம் ஊடாக அரசின் உரிய தரப்புகள் உட்பட தன்னார்வ அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் பணி முன்னெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட நிவாரண சுற்றறிக்கைகள் காணப்படுவதனால், அந்த சுற்றறிக்கைகளின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் பாரபட்சமற்ற முறையில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது இதன் ஊடாக மேற்பார்வை செய்யப்படும். பயனாளிகளையும் நிவாரண நிறுவன வலையமைப்புகளையும் ஒன்றோடொன்று தொடர்பு பட வைத்து, நிவாரண நடவடிக்கைகளை ஒழுங்கு முறையில் பெற்றுக் கொடுப்பதற்கான தலையீடுகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படும்.
கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோரின் பரிந்துரைகளின் பேரில் மட்டுமே உரிய நன்மைகள் உரிய தரப்பினருக்கு போய்ச் சேர வேண்டும். நிவாரணம் பெற அரசியல்மயமாக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளும் அவசியம் என்று சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆகவே இவ்விடயம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய தேவை காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சமூக சேவைகள் அமைச்சின் கீழ் நலன்புரி நன்மைகள் சட்டம் காணப்படுகின்றன. யாரையும் வித்தியாசமாக நடத்துவது அடிப்படை உரிமைகளைக் கூட மீறும் செயலாக அமைந்து காணப்படுகின்றன. நிவாரண நடவடிக்கைகளில் பாராபட்சம் காட்டக் கூடாது. பாதிக்கப்பட்ட சகலரையும் சென்றடைய வேண்டும் வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
By C.G.Prashanthan