சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 56-வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மார்க் கார்னி நேற்று அந்த நகரைச் சென்றடைந்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தக மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், கனடாவின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதே மார்க் கார்னியின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
முன்னாள் வங்கியியல் விற்பன்னரான மார்க் கார்னி, உலகப் புகழ்பெற்ற தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டவர் ஆவார்.
அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, கனடாவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பில்லியன் கணக்கான டாலர் முதலீடுகளை ஈர்க்க அவர் திட்டமிட்டுள்ளார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 56-வது ஆண்டு கூட்டத்தில் ஆற்றப்படவுள்ள தமது உரையில், கனடாவை ஒரு பாதுகாப்பான முதலீட்டுப் பிரதேசமாக, பிரதமர் மார்க் கார்னி முன்னிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரை அமெரிக்காவை மட்டுமே அதிகம் நம்பியிருந்த கனடாவின் வர்த்தகத்தை, சீனா, ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்கு விரிவுபடுத்துவது கார்னியின் இலக்காகும்.
இதேவேளை, கிரீன்லாந்தை வாங்குவது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்கள் மற்றும் வரி விதிப்பு அச்சுறுத்தல்களைச் சமாளிப்பது தொடர்பில் நேட்டோ (NATO) நாடுகளுடன் பிரதமர் கார்னி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகின்றது.