மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (03) கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாச் சந்தையாக இந்தியா விளங்குவதாகவும், இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ஐரோப்பிய நாடுகளுக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை ஊடாக நேரடி விமானப் பயணங்களை ஆரம்பிக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் ஐரோப்பாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் எவ்வித தடையுமின்றி இலங்கைக்கு வந்து செல்ல முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.