‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை இயக்கிய இயக்குநர் அபிஷன் ஜீவந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கு, ‘வித் லவ்’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தவிர்த்து திரையுலகின் உச்ச நட்சத்திரமான சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வித் லவ்’ எனும் திரைப்படத்தில் அபிஷன் ஜீவந்த், அனஸ்வரா ராஜன், ஹரிஷ் குமார் , காவியா அனில் , சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ஜியான் ஃபிலிம்ஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பஸ்லியான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான டீசர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெறும் காட்சிகள் இளமை ததும்ப இருப்பதால் இளைய தலைமுறை ரசிகர்களையும், இணையவாசிகளையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.