சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1900 கடற்றொழில் வலைகளை மன்னார் மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்திற்கு ஜனாதிபதி நேரடியாக விஜயம் செய்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை அவசரமாக கூட்டி இருந்தார். வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருந்தது.
இடர் ஏற்பட்ட காலத்திலிருந்து மீனவர்களுடைய பிரதான கோரிக்கையாக, தங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படவில்லை. தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு மிகவும் துன்பியலுக்கு உட்பட்டதாக அவர்களுடைய முறைப்பாடு இருந்தது.
இந்த கோரிக்கையை நான் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி இருந்தேன். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு உணவு தட்டுப்பாடு கூட இருக்கிறது எனத் தெரியப்படுத்தி இருந்தேன். ஜனாதிபதி மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற கிட்டத்தட்ட 12000 மேற்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக இரண்டு வாரங்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதாகவும் அதேபோல் வடக்கு மாகாண மீனவர்களுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்பட இருக்கின்றது.
அத்துடன் சேதமடைந்த படகுகளை திருத்துவதற்கும் ஏனைய கடற்றொழில் உபகரணங்களை திருத்துவதற்கும் உரிய நிதியினை விடுவிப்பதாக கூறப்பட்டது. அது மட்டுமல்லாமல் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1900 கடற்றொழில் வலைகளை மன்னார் மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதுக்கும் மேலாக பாடசாலை மாணவர்களுடைய தரவுகள் சேகரிப்பதில் சில மந்தநிலை காணப்பட்டது. அது தொடர்பாக ஜனாதிபதி கடுமையான உத்தரவை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
வருகின்ற 31 ஆம் திகதிக்குள் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தலா 15000 ரூபாய் ஆரம்ப கொடுப்பனவாக கொடுத்து அவர்களுடைய கற்றல் உபகரணங்கள், பாடசாலை பைகள், சப்பாத்துக்கள், சீருடை போன்றவற்றை உடனடியாக கொள்வனவு செய்வதற்கு வழங்குமாறு கூறியிருக்கின்றார். விசேடமாக பாதைகள் முழுமையாக மோசமான நிலையை அடைந்திருக்கின்றது.