டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள, சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கத்தின் தலைவர் கலாநிதி வண, கே. குணரத்ன தேரர் தலைமையிலான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை சேர்ந்த குழு, வெள்ளிக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவை சந்தித்தது.
Clean Sri Lanka செயலகத்தின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க, இந்தக் குழு ஜனாதிபதியின் செயலாளரிடம் உறுதியளித்தது.
அண்மைய வரலாற்றில் இலங்கை முகங்கொடுத்த மிக மோசமான அனர்த்தமான டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கும் வெளிநாட்டு சங்கங்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவைப் பெற தமது சங்கம் உள்ளிட்ட குழு, சுய விருப்பத்துடன் முன்வந்தாக கலாநிதி வண, கே. குணரத்ன தேரர் இங்கு தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான பொருள் உதவிகளை துரிதப்படுத்தவும், அரசாங்கம் செயல்படுத்தும் Rebuilding Sri Lanka வேலைத்திட்டத்திற்கு ஒரு முறையான திட்டத்தின் கீழ் ஆதரவளிக்கவும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள், அடுத்த சில நாட்களில் இந்நாட்டுக்கு வந்து சேரும் என்றும் தூதுக்குழு மேலும் தெரிவித்தது.
சீரற்ற யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் முறையான வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க முறையான நகர திட்டத்தின் மூலம் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இங்கு தெரிவித்தார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைப் பிள்ளைகளுக்கு அவசியமான உபகரணங்களை வழங்குதல் தொடர்பான முதற்கட்ட இணக்கத்தை இரு தரப்பினரும் எட்டினர்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அப்போன்சு, Clean Sri Lanka வேலைத் திட்டத்தின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கத்தின் செயலாளர் டயனா லீ (Diana Lee), சிங்கப்பூர் சிங்கள பௌத்த சங்கத்தின் செயலாளர் ரஞ்சனி சில்வா, Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர் (சமூக) கபில செனரத் உட்பட தூதுக் குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.