நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்போவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
ஒட்டகங்களை சிறந்த முறையில் வளர்ப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
சவூதி அரேபியா அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை ஒட்டக வளர்ப்பின் லாபத்தை அதிகரிக்கும் மற்றும் விலங்குகள் மற்றும் உரிமையாளர்களை அடையாளம் காண்பதற்கான நம்பகமான தரவுத்தளத்தை உருவாக்கும்.
2024-ஆம் ஆண்டில், சவூதி அரேபியாவில் சுமார் 2.2 மில்லியன் (22 லட்சம்) ஒட்டகங்கள் இருப்பதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
இந்த ஒட்டகங்கள் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பொருளாதாரத்திற்கு இரண்டு பில்லியன் ரியாலுக்கும் மேல் பங்களிக்கின்றன.
ஒட்டகம் சவூதி அரேபியாவின் தேசிய சின்னத்தின் ஒரு பகுதியாகும். அந்நாடு ஒட்டகங்களுக்கான அழகுப் போட்டிகள் மற்றும் கண்காட்சிகளையும் நடத்துகிறது, அதில் சிறந்த ஒட்டகங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
சௌதி அரேபியாவின் தேசிய விழாக்கள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தருணங்கள் ஒட்டகங்கள் இன்றி நிறைவடையாது. சவூதி அரேபியா மற்றும் அரபு வளைகுடா நாடுகளில் ஒட்டகங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு.