கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றவும், வெள்ள பாதிப்புகளைக் குறைக்கவும் எனும் காரணங்களுக்காக என்று முன்மொழியப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (OMR) ஆகியவற்றுக்கு இடையே உள்ள கோவளம் துணை வடிநிலத்தில் ஒரு புதிய நன்னீர்த் தேக்கம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
உப்பங்கழிகள் என்பது கடல் நீர் புகுந்து செல்லும் உவர்நீர் பகுதிகள். இங்கு நன்னீரைத் தேக்குவதால், இயற்கையான உப்புத்தன்மை மாறும் அதன் விளைவாக இறால் மற்றும் மீன்களின் இனப்பெருக்கச் சுழற்சியை அழித்துவிடும். இப்பகுதி பல புலம்பெயர் பறவைகளுக்கும், அரிதான கடல்வாழ் உயிரினங்களுக்கும் வாழ்விடமாகும். நன்னீர்த் தேக்கம் உருவானால், இந்த ஒட்டுமொத்த உயிரினச் சூழலும் அழிந்துவிடும்.
இதே பகுதியில் தமிழக அரசின் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் கடல்நீரைத் சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தையும் வைத்துக்கொண்டு, இயற்கை உப்பங்கழிகளை அழிக்கும் வகையிலும் திட்டம் முன்மொழிவது எதற்கு என்கிற கேள்வி எழுகிறது. மறுபுறம், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கும் முன்பே திட்டப்பணிகளுக்கான ஏற்பாடுகள் நடப்பது மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரான செயலாகும்.
16 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பலிகொடுத்து உருவாக்கப்படும் இந்த நன்னீர்த் தேக்கம், சூழலியல் மீட்டுருவாக்கத்திற்குப் பதிலாக அழிவுக்கே இட்டுச்செல்லும். எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட்டு மாற்று வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகின்றேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.