கொழும்பு 04, புனித பேதுருவானவர் கல்லூரியின் (St. Peters college) விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ‘Colours Night 2025’ விழா 12 ஆம் திகதி வியாழக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இளம் விளையாட்டு வீரர்களின் அபாரமான சாதனைகளை கௌரவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, பெருமை, ஊக்கம் மற்றும் பாராட்டுகளால் நிரம்பியதாக அமைந்தது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக TDM International Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தெமியா அன்தனி டி மெல் கலந்துகொண்டார். இவர் புனித பேதுருவானவர் கல்லூரி ரக்பி அறக்கட்டளையின் உப தலைவராகவும், கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் (UK) முன்னாள் தலைவராகவும் விளங்குவதோடு, கல்லூரியின் விளையாட்டு, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புகளை வழங்கிய பழைய மாணவராகவும் திகழ்கிறார்.
கல்லூரியின் அதிபர் அருட்தந்தை ரோஹித ரொட்ரிக்கோவின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், உப அதிபர் அருட்தந்தை இந்துநில் சம்பத் பெரேரா உள்ளிட்ட குருவானவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்களான அருட்தந்தை துசித சோலங்காரச்சி மற்றும் அருட்தந்தை பிரவீன் விஜேசேகர ஆகியோரின் வழிகாட்டுதலும் அர்ப்பணிப்பும் மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது.
நிகழ்வின் ஏற்பாடுகளில் விளையாட்டு செயலாளர் சுனந்த பெர்னாண்டோ மற்றும் உதவி விளையாட்டு செயலாளர் ஷெஹான் டயஸ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.
கடந்த 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளை உள்ளடக்கிய வகையில், இந்த ஆண்டு Colours Night வரலாற்றுச் சிறப்புடன் நடைபெற்றது. இதன்போது, 290 மாணவர்களுக்கு விருதுகளும் வரலாற்றுச் சாதனை விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில், கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள், பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், விளையாட்டு அறக்கட்டளைகள், ஆலோசனைக் குழுக்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்துகொண்டு புனித பேதுருவானவர் கல்லூரி குடும்பத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
Colours Night 2025 என்பது ஒரு விருது வழங்கும் விழா மட்டுமல்லாமல், “Virtus et Veritas” (வீரமும் உண்மையும்) என்ற கல்லூரியின் பாரம்பரியத்தை மீண்டும் உறுதிப்படுத்திய, இளம் மாணவர்கள் எதிர்கால சந்ததிகளாக உருவாகும் பயணத்தை கொண்டாடிய ஒரு நாளாக அமைந்தது.
By C.G.Prashanthan