இந்து கல்லூரி – கொழும்பு, பழைய மாணவர் சங்கத்தின் தன்னார்வலர்கள் குழு திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மிகவும் பின்தங்கிய பகுதிகளுக்கு ரூபா 5 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான அவசர நிவாரணத்தை வழஙகியுள்ளார்கள்.
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, மூதூர், வெருகல் மற்றும் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு ஆகிய நான்கு பகுதிகளுக்கும் நிவாரணப் பொதிகளைக் கொண்டு சென்று வழங்கினார்கள்.
நேற்றைய தினம் அதிகாலை 2.30 மணிக்கு கொழும்பிலிருந்து வடகிழக்கு நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்த குழுவினர் தொடர்ச்சியாக 24 மணி நேரத்திற்கும் மேலாக வீதிகளில் பயணித்து இந்தப் பணியை நிறைவேற்றினர்.
வாகனத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக ஓரிரண்டு மணி நேர தாமத்தின் பின்னரே பயணத்தைத் தொடரக் கூடியதாக இருந்ததாக குழுவினர் அறிவித்துள்ளார்கள்.
அனைத்து சவால்களையும் தாண்டி குழுவினர் நள்ளிரவு 12.15 மணியளவில் மாந்தை மேற்குப் பிரதேச செயலகத்தை அடைந்து பிரதேச செயலாளரிடம் பொருட்களைக் கையளித்தனர்.
தமது நிவாரணப் பணிகள் குறித்து இந்து கல்லூரி – கொழும்பு, பழைய மாணவர் சங்கத்தினர் “அடுத்த கட்டமாக மலையகப் பகுதிகளுக்குச் செல்ல நாங்கள் ஆலோசித்துள்ளோம்” எனக் குறிப்பிட்டனர்.
நிவாரணப் பணிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தினர் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு மேற்படிப் பணி வெற்றிபெற உதவிய அனைத்து தன்னார்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், இந்து மகளிர் கல்லூரி, தமிழ்ச் சங்கம், பழைய மாணவர்கள், நிதியுதவி அளித்த நன்கொடையாளர்கள் ஆகிய சகலதரப்பினரதும் பங்களிப்பு இன்றியமையாதவை என இந்து கல்லூரி – கொழும்பு, பழைய மாணவர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
By C.G.Prashanthan