வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா இன்று (24.10.2025) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான எஸ்.முரளிதரன் தலைமையில், இரனைமடு நெலும் பியச (தாமரைத் தடாகம்) மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு குறித்த விழா பாரம்பரிய கலை கலாச்சார பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினர்களாக கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரும் வடக்கு மாகாண ஆளுநரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகனும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் நிதர்ஷன் மற்றும் கிளிநொச்சி மேனாள் வலயக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், கெளரவ விருந்தினர்களாக கரைச்சி பிரதேச கலாசாரப் பேரவை உறுப்பினர் “கலைக்கிளி” வேலுப்பிள்ளை சௌந்தரராசா, பூநகரி பிரதேச கலாசாரப் பேரவை உறுப்பினர் “கலாபூஷணம்” சண்முகம் இரத்தினேஸ்வரன், கண்டாவளை பிரதேச கலாசாரப் பேரவை உறுப்பினர் “கலைக்கிளி” மயில்வாகனம் வேலாயுதபிள்ளை, பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசாரப் பேரவை உறுப்பினர் “கலாபூஷணம்” கந்தையா ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.