மங்காத்தா படம் பார்க்க தியேட்டருக்கு வந்து புதுமண ஜோடியை பார்த்து வியக்காதவர்களே இல்லை எனலாம். அந்த பாசக்கார ஜோடியின் வீடியோவை பலரும் ஷேர் செய்கிறார்கள்.
ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது அஜித் குமாரின் மங்காத்தா படம். இந்நிலையில் புதுமண ஜோடி ஒன்று செய்த காரியம் பலரையும் வியந்து பேச வைத்திருக்கிறது.
அஜித் குமாரின் 50வது படமான மங்காத்தா ஜனவரி 23ம் தேதி தியேட்டர்களில் ரீ ரிலீஸானது. ரீ ரிலீஸ் தானே என்று மக்கள் நினைத்த நிலையில் ஏதோ புதுப்படம் ரிலீஸான மாதிரி தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்துவிட்டார்கள். மங்காத்தா படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் கூட்டத்திற்கு குறைவே இல்லாமல் இருக்கிறது.இதனால் படம் ரிலீஸான அன்று தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 3.75 கோடி வசூல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு ரீ ரிலீஸ் படம் முதல் நாளே இத்தனை கோடி வசூல் செய்தது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் இன்னொரு சம்பவமும் நடந்திருக்கிறது.
ஜனவரி 23ம் தேதி திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு அன்றே மங்காத்தா படத்தை அதுவும் தியேட்டரில் பார்க்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து தாலியை கட்டிய கையோடு கணவனும், மனைவியும் அதே உடையில் தியேட்டருக்கு வந்து மங்காத்தா பார்த்து ரசித்திருக்கிறார்கள். திருமணம் முடிந்த ஒரு மணிநேரத்தில் தியேட்டருக்கு வந்த ஜோடியின் வீடியோ வெளியாகி வைரலாகிவிட்டது.