கியூபெக்கின் தலைமை மரண விசாரணை அதிகாரி, கடந்த ஆண்டு லெவிஸ் பகுதியில் உயிரிழந்த 13 வயது சிறுமி மேலீன் லூகெஸின் (Maëlyne Lugez) மரணம் குறித்து பொது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிறுமியின் மரணம் விபத்தாக நடந்ததாகக் கூறிய முந்தைய விசாரணை அறிக்கையின் முடிவுகளை, அவரது தந்தை பகிரங்கமாக கேள்விக்குள்ளாக்கினார்.
அதைத் தொடர்ந்தே, கியூபெக்கின் தலைமை மரண விசாரணை அதிகாரியினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலீன் லூகெஸ் கடந்த நவம்பர் 6-ஆம் திகதி அன்று காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்டது.
அடுத்த நாள், அவர் கடைசியாகக் காணப்பட்ட பள்ளிக்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள நீரோடையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அந்த நீரோடையில் அவரது முகம் பகுதியளவு மூழ்கிய நிலையில், காணப்பட்டது.
மரண விசாரணை அதிகாரி சோஃபி ரெஜினி (Sophie Réginière) வெளியிட்ட ஆரம்ப அறிக்கையில், அந்தச் சிறுமி ஒரு மருத்துவப் பிரச்சினை காரணமாக மயக்கமடைந்து, பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
உணவுக் கோளாறு காரணமாக அவரது உடலில் கீட்டோன் செறிவு அதிகமாக இருந்ததால், மயக்கம் அல்லது இரத்த அழுத்தம் குறைதல் போன்ற காரணங்களால் அவர் விழுந்து சுயநினைவை இழந்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், அந்த சிறுமியின் மரணம் குறித்து பொது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.