டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கக் கோரி, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டமானது இன்று (18.2.2026) காலை கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்த இந்தப் போராட்டத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு தமக்கான நீதியைக் கோரி கோஷங்களை எழுப்பினர்.
கடந்த டித்வா புயல் அனர்த்தத்தின் போது ஈச்சந்தீவு கிராமத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் கல்வி ரீதியாகவும் வாழ்வாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான நஷ்டஈடு அல்லது விசேட கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது குறித்து போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில்,”எமது மாணவர்களுக்கான கொடுப்பனவு ஏன் இன்னும் வழங்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை விளக்குமாறு கோரி கடந்த டிசம்பர் 31ஆம் திகதி கிண்ணியா பிரதேச செயலாளருக்குக் கடிதம் ஒன்றை வழங்கியிருந்தோம்.
ஆனால், இதுவரை அவரிடமிருந்து எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை.” பிரதேச செயலகத்தில் தீர்வு கிடைக்காத நிலையில், இம் மக்கள் திருகோணமலை மாவட்டச் செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கிருந்து அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், பெப்ரவரி மாதம் 11ஆம் திகதிக்குள் இதற்கான தீர்வு பெற்றுத் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறிப்பிட்ட திகதி கடந்தும் கிண்ணியா பிரதேச செயலகம் இது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பிரதேச செயலாளரிடம் கையளித்த மக்கள், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது, உடனடியாகத் தமக்கான தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் எச்சரித்தனர்.