பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இளம் தலைமுறையினர் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
உலகெங்கும் உள்ள இளம் தலைமுறையினர், தங்கள் நாடுகளில் நடந்து வரும் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். நம் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம், இலங்கையில் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டங்கள் அரசை ஆட்டம் காண வைத்ததுடன், ஆளும் முக்கிய தலைவர்களை நாட்டை விட்டே வெளியேற வழி செய்தது.
பல ஐரோப்பிய நாடுகளிலும் இதுபோன்ற போராட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் தற்போது இளைஞர்களின் எழுச்சி துவங்கியுள்ளது.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தான் தற்போது இத்தகைய சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே, விலைவாசி உயர்வு, கோதுமைக்கான மானியம், மின்சாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இப்பகுதி மக்கள், அரசுக்கு எதிராக போராட்டங்கள், வன்முறைகள் நிகழ்ந்தன. போராட்டக்காரர்களிடம் அரசு பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து அப்போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு இயல்புநிலை திரும்பியது.